மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. அண்மையில் ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்டு அந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் அவ்வப்போது ரேசில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்டு கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே திமுக கொடிகளுடன் சொகுசு கார்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வட்டமடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. காரில் உள்ள மேற்பரப்பை திறந்து விட்டு இளைஞர்கள் நின்றபடி அதிவேகமாக செல்வதும் ஒரே இடத்தில் 4, மற்றும் 5 கார்கள் புழுதி பறக்கும் வகையில் வட்டமளித்தபடி சுற்றிக் கொள்வதுமாக இந்த காட்சிகள் உள்ளன. திமுக கொடி கட்டப்பட்ட இந்த கார்களின் சாகச வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களில் பதிவினைக் கொண்டு நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment