ஆவடி, பாரிவாக்கம் சாலைகளில், முழங்கால் அளவிற்கு கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர், பூந்தமல்லி நகராட்சிப் பகுதிகளில், பல இடங்களில் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால், விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில், சென்னீர்குப்பம் பகுதியில், பூந்தமல்லி நகராட்சி மற்றும் சென்னீர்குப்பம் ஊராட்சியில் இருந்து வெளியேறும் மழை நீர், அதிக அளவில் தேங்கியது. கழிவு நீரும் சேர்ந்து ஓடுவதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாதிப்பை சந்தித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, அணுகு சாலை வெள்ளத்தில் மூழ்கியது.

அங்கு, நகராட்சி சார்பில் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. பூந்தமல்லி - பாரிவாக்கம் பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட, வசந்தபுரி பகுதி- 2, சாய் நகர், நண்பர்கள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். ஆங்காங்கே கால்வாய் மூடப்படாமல் உள்ளதால், பள்ளம் எங்கிருக்கிறது என்பது தெரியாமல், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்த இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில், எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிரிழப்பு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment