இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்அடிப்படையில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீஸார் கொள்ளை நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரே நபர்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் தனியார் நிறுவன சீருடை அணிந்திருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த சூழலில் பூந்தமல்லி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சீருடை அணிந்த இளைஞர் ஒருவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், தனியார் நிறுவனத்தில் இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதாகக் கூறினார். இந்தச் சமயத்தில் அவரைப் பார்த்ததும் வாகனச் சோதனையிலிருந்த காவலர் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் கொள்ளை நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி-க்களிலும் இதே சீருடை அணிந்த நபரின் புகைப்படங்கள் பதிவாகிருப்பது நினைவுக்கு வந்தது. உடனடியாக அந்த இளைஞரிடம் போலீஸார் துருவி, துருவி விசாரித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பூட்டிய வீடுகளில் தனியார் நிறுவனத்தின் சீருடை அணிந்து கொள்ளையடித்தது அந்த இளைஞர்தான் எனத் தெரியவந்தது. அவரின் பெயர் சிவசந்திரன் (32) என்றும் விழுப்புரத்தை அடுத்த செஞ்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பூந்தமல்லி போலீஸார் கூறுகையில், ``சிவசந்திரன், சென்னை திருவேற்காடு பகுதியில் மனைவியுடன் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சிவசந்திரனைப் பிரிந்து அவரின் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால் தனியாக வசித்து வந்த சிவசந்திரன், தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பூந்தமல்லி, திருவேற்காடு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் சிவசந்திரனுக்கு நன்றாக தெரியும் என்பதால் அங்கிருக்கும் வீடுகளைக் குறி வைத்து கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க ஏற்கெனவே வேலைப்பார்த்த நிறுவனத்தின் சீருடையை அணிந்துக் கொண்டு சிவசந்திரன், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஞாயிறு மட்டும் ஈடுபட்டு வந்துள்ளார். வாரத்தில் ஆறு நாள்கள் ஓய்வெடுக்கும் சிவசந்திரன், ஞாயிற்று கிழமை இரவு நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். கொள்ளையடித்த நகை, பணத்தை செலவழித்து சந்தோஷமாக இருந்துள்ளார். தங்க நகைகளை தனியார் வங்கிகளில் அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து பத்து சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். கொள்ளையடிக்க பயன்படுத்திய ஸ்பேனர்கள், கட்டிங் பிளேடு, இரும்பு ராடு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளோம். சிவசந்திரன் எங்கெல்லாம் கொள்ளையடித்தார் என்று விசாரித்து வருகிறோம். இதுவரை பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு 5 புகார்கள் வந்துள்ளன" என்றனர்.
No comments:
Post a Comment