திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்.


திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடித் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வணங்கினர்.


பிரசித்தி பெற்ற திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடிப் பெருந்திருவிழா, கடந்த ஜூலை 16 -ம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த காலகட்டங்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சங்காபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்த் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தங்க ஆபரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினார்.


தொடர்ந்து, தாரை தப்பட்டை, பட்டாசு முழங்க, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருத்தேர், சன்னதி தெரு, சிவன் கோயில் தெரு, தேரோடும் வீதிகள், கோலடி சாலை வழியாகச் சென்று, மீண்டும் தேரடியை தேர் வந்தடைந்தது. மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் 3 மணி நேரம் தேரோட்டம் நடைபெற்றது.


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் திருவேற்காடு, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, 'ஓம் சக்தி.. பராசக்தி..' என பக்தி முழக்கமிட்டவாறு, தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை வணங்கினர்.


மேலும், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட எல்இடி திரையில் கோயில் தல வரலாறு, திருவிழா விபரங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஒளிபரப்பை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார், இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், கோயில் துணை ஆணையர் ஜெயப்பிரியா, அறங்காவலர் குழு தலைவர் டெக்கான் மூர்த்தி, அறங்காவலர்கள் மற்றும் திருவேற்காடு நகராட்சித் தலைவர் என்.இ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad