மின் விளக்கு அமைத்து தரக்கோரி, தீபந்தம் ஏந்தியும், டார்ச் லைட் அடித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர், சென்னை மதுரவாயல் - தாம்பரம் செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் கடந்த பத்து வருடமாக மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால், விபத்துகள் மற்றும் வழிப்பறிகள் நாள்தோறும் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இங்குள்ள சுங்கச்சாவடியில், பல கோடி ரூபாய் கட்டணமாக வசூல் செய்து வரும் நிலையில், சாலையின் இருபுறமும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு இப்பகுதி மக்களும், லாரி உரிமையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மின் விளக்கு வசதி அமைத்து தரக்கோரி, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், கையில் தீ பந்தம் ஏந்தியும் டார்ச் லைட் அடித்தும், போரூர் டோல்கேட் அருகே நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து லாரி உமையாளர்கள் கூறியதாவது : ஆண்டுக்கு 100 கோடி வசூல் செய்யக்கூடிய சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தெரு விளக்கே இல்லை. மின் விளக்கை அமைத்து தர கூறி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு ஒரு வருடம் ஆகியும் இதுவரை மின் விளக்கை அமைத்து தரவில்லை. மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, மத்திய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக மின்விளக்கை அமைத்து தர வேண்டும்.
மேலும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரி மூன்று மாதத்திற்குள் 60 கிலோ மீட்டருக்குள்ளாக உள்ள சுங்க சாவடி எடுக்கபடும் என கூறி நான்கு மாதம் ஆகியும் இந்த சுங்க சாவடி எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் மூன்று கோரிக்கைகளும் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது என லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment