அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து ரூபாய்.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து ரூபாய்.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி நகரத்தில் உள்ள சர்வே எண்கள் 324/1ல் 3650 சதுர மீட்டர் நிலத்தில், 22 பேருக்கு பட்டாவும் சர்வே எண் 324/3ல், 78,500 சதுர மீட்டர் கொண்ட பாறை புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகைபாடு செய்து தலா 75 சதுர மீட்டர் பரப்பு வீதம் மொத்தம் 130 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இவர்களின் ஆண்டு வருமானம் ₹48 ஆயிரம், ₹60 ஆயிரம் மற்றும் ₹72 ஆயிரம் வருவாய் சான்றில், விவசாய கூலிகள் நெசவு கூலிகள் என குறிப்பிட்டு அறிக்கை தயார் செய்துள்ளனர்.


இதற்கு அப்போதைய அதிமுக அரசுதான் காரணம் என கூறப்படுகிறது. மாவட்ட வருவாய் துறையினரை நிர்பந்தப்படுத்தியும், கட்டாயப்படுத்தியும் கடந்த 2020ம் ஆண்டு பட்டாக்கள் வழங்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் முன்னணி மற்றும் சில அமைப்பினர் பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். சமூகத்தில் நலிந்த மக்களுக்கு இந்த பகுதியில் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதுதவிர, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பினர்.


இந்நிலையில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மேற்கண்ட பட்டா சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருத்தணி வருவாய் துறையினர் விசாரணை நடத்தியதில், பட்டா வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. வியாபாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், காஸ் கம்பெனி உரிமையாளர் என பலருக்கும் குடும்ப வருமானத்தை குறைத்து காண்பித்து பட்டா வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, மேற்கண்ட இடத்துக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ததுடன் மறு அறிவிப்பு வரும்வரை நகர்ப்புறத்தில் யாருக்கும் இலவசமாக பட்டா வழங்கக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில். திருத்தணி - அரக்கோணம் சாலை இணையும் புதிய புறவழிச்சாலையில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மீட்கப்பட்ட அரசு நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டி, வீடுகளே இல்லாததவர்களும் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்டகை எடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், குடிசை மாற்று வாரிய அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். முறைகேடாக பட்டா பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad