ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆல் - பெக் என்ற பிரபல உணவகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் இரண்டு தளங்கள் உள்ளது. இதில், இரண்டாவது தளத்தில் உணவு தயாரிக்கும் சமையலறையும், தரை மற்றும் முதல் தளத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ணும் இடமும் அமைந்துள்ளது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு உணவக நேரம் முடிந்த நிலையில், ஊழியர்கள் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இரண்டாவது தளத்தில் உணவு தயாரிக்கும் சமையலறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த ஊழியர்கள் அச்சமடைந்து உணவகத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர், ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் வீரர்கள் முதலில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இதனை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் சமையல் அறை முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சமையலறையில் உள்ள எக்ஸாஸ்ட் பேனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment