49 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த மழைநீர் வடிகால், புதிய ராணுவ சாலையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பருத்திப்பட்டு கூவம் ஆறு வரை அமைக்கப்படுகிறது. சாலையின் இருபுறமுமாக 3 கி.மீ., துாரத்திற்கு வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த மழைநீர் வடிகால், ஜே.பி., எஸ்டேட், விவேகானந்தா நகர், வசந்தம் நகர், ராஜ் பாய் நகர், கோவர்த்தனகிரி, லட்சுமிபுரம், அய்யன்குளம் மற்றும் பருத்திப்பட்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
இந்த சாலையில், எம்.எல்.ஏ., அலுவலகம், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள், மாநகராட்சி பூங்காக்கள், சிறு மற்றும் பெரு வணிக நிறுவனங்கள், தனியார் அடுக்ககங்கள் உட்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்கள் அனைவரும், இந்த நெடுஞ்சாலை வழியாக தான் ஆவடி, பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்கின்றனர். மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடப்பதால், ஜே.பி., எஸ்டேட் துவங்கி வசந்தம் நகர் வரை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில், அதிக விபத்து நடக்கும் பகுதியாக இந்த நெடுஞ்சாலை மாறி இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், ஆமை வேகத்தில் நகரும் பணிகளால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.இதுமட்டுமல்லாமல், சாலையில் ஆங்காங்கே மின் கம்பங்கள் நிறுத்த பள்ளங்கள் தோண்டி மூடப்படாமல் இருப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.புதிய அரசு பதவி ஏற்றதும், இந்த பணிகள் விரைவுப்படுத்தப்படும் என, நம்பியிருந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே விஞ்சியது.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment