திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் குமார்(60). இவரது மனைவி அமுலு(55). இவர்களுக்கு கோபி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோபி தனது தாய், தந்தையை ஏமாற்றி அவரது பெயரில் இருந்த வீட்டை மோசடி செய்து தன் பெயருக்கு மாற்
றி பத்திரப்பதிவு செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றினார். தற்போது இவர்கள் 2 பேரும் மாமியார் பாரிஜாதத்துடன் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக 8 முறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனையடைந்த குமார் தன் மனைவி அமுலு மற்றும் மாமியார் பாரிஜாதம் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்தவுடன் தாங்கள் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயற்சி செய்தனர்.
இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் மனுவையும் அளித்தனர்.
No comments:
Post a Comment