மின்தடையால் மின் அலுவலகம் சூறை பொதுமக்கள் ஆத்திரம்! - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

மின்தடையால் மின் அலுவலகம் சூறை பொதுமக்கள் ஆத்திரம்!

திருவள்ளூர் அருகே மின்வெட்டால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை சூறையாடி, ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் பகுதியில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கும்போது சரிவர பதில் கூறுவதில்லை.


இரவுநேர மின்வெட்டால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை சூறையாடி, ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார்.


மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.


இந்தநிலையில் நேற்று இரவும் வழக்கம் போல் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் குப்பன் மின்தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.


அப்போது மின்வாரிய அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் மின் ஊழியர் குப்பனிடம் மின்தடைக்கான காரணம் குறித்து கேட்டனர். தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஏன் இதை சீர் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனை மின்ஊழியர் குப்பன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலி ஆகியவற்றை நொறுக்கி சூறையாடினர். மேலும் இரும்பு கம்பியால் குப்பனின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்தம் கொட்டியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடனே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.


படுகாயம் அடைந்த மின் ஊழியர் குப்பனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது தலையில் 7 தையல் போடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்ஊழியர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad